வெண்டைக்காய் புளிக்குழம்பு!!! புளி குழம்புன்னா யார்க்கு தான் பிடிக்காது . அருளையும் வெண்டைக்காய் புளி குழம்பு நினைச்சாலே சாப்பிடணும் போல தோணும். என் அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச குழம்பு. கடைசியா சட்டில மிச்சம் இருக்கிற கொஞ்சூண்டு குழம்பு வீணா போகக் கூடாதுனு அதுக்குள்ள சாப்பாட்ட போட்டு பிரட்டி சாப்பிடுவேன் :P. தமிழ் நாடு ஸ்டைல் வெண்டைக்காய் புளி குழம்பு செய்றது எப்படினு பாக்கலாம்.
வெண்டைக்காய் புளிக்குழம்பு
தயார்செய்யும் நேரம்:10 நிமிடம் | சமைக்கும் நேரம் : 45 நிமிடம் அளவு : 4 பேர் சாப்பிட | எந்தவகை சமையல்: இந்திய உணவு
தேவையான பொருட்கள்:
வதக்குவதற்கு :
வெண்டைக்காய் - 250 கிராம்
கடலை எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
தாளிப்பதற்கு :
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் / வெந்தய தூள் - 1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
உளுந்து பருப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
வெல்லம் - 2 தேக்கரண்டி
புளி - 1 எலுமிச்சம்பழ அளவு
கருவேப்பில்லை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு:
நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 6 - 7
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மல்லி - 2 தேக்கரண்டி
வர மிளகாய் - 2 -3
கருவேப்பில்லை - 1 கொத்து
தக்காளி -2
துருவிய தேங்காய் - 1/4 கப்
செய்முறை விளக்கம்:
- வெண்டைக்காயை கழுவி காட்டன் துணி கொண்டு ஈரத்தை நன்றாக துடைத்து எடுத்து 1" துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தக்காளி வெங்காயத்தை வெட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். புளியை சிறிதளவு நீரில் ஊற விடவும். ஒரு வாணலியில் கடலெண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
- வெண்டைக்காய் மேல்புறம் மொறுமொறுப்பாகும் வரை வதக்கவும். பின், மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு, கருவேப்பில்லை, மல்லி, ஜீரகம், வர மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து அதில் உள்ள நீர் சுண்டி தோல் சுருங்கும் வரை வதக்கவும். கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.
- வதக்கியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். வெண்டைக்காய் வதக்கிய வாணலியில் மீண்டும் 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு சேர்த்து பொரிந்ததும் கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு , வெந்தயம், கருவேப்பில்லை, வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- இதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து, ஊற வைத்த புளியை கரைத்து புளி தண்ணீரை ஊற்றவும். 3/4 கப் தண்ணீர் ஊற்றவும். பிறகு மஞ்சள் தூள் , மிளகாய் தூள், சாம்பார் தூள், வெள்ளம் மற்றும் உப்பு சேர்த்து 30 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- 30 நிமிடம் களைத்து எண்ணெய் தனியாக திரிந்து வரும் இது குழம்பு தயார் என்பதைக் குறிக்கும். இப்பொழுது வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து 10 நிமிடம் இறக்கினால் சுவையான வெண்டைக்காய் புளி குழம்பு தயார் :)
சூடான சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு தயார்!
|
என் குறிப்பு:
1. நான் வறுத்து அரைப்பதற்கு வர மிளகாய், முழு மல்லி சேர்த்துளேன் , நீங்க வேண்டுமெனில் மிளகாய் தூள் 1 தேக்கரண்டியும் மற்றும் மல்லி தூள் 2 தேக்கரண்டியும் அரைத்த மசாலா விழுது சேர்த்த பின்பு சேர்த்துக் கொள்ளலாம.
2. வெண்டைக்காய் முற்றலாய் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
Comments
Post a Comment