எப்பவுமே தென்மாநில சமையல் செஞ்சு அலுத்து போச்சா உங்களுக்கு? கொஞ்சம்
வித்யாசமா ஏதாச்சும் செய்யணும்னு தோணுதா ? இந்த ட்ரை ஐட்டம் செஞ்சு பாருங்க
ரொம்ப நல்லா இருக்கும். மட்டர் என்றால் பச்சை பட்டாணி .இதை நான் ஒரு
சமையல் நிகழ்ச்சில பார்த்து கொஞ்சம் மாத்தி செஞ்சிருக்கேன். ரொம்ப நல்ல
இருந்துச்சு நீங்களும் செஞ்சு பாருங்க.
கடாய் மட்டர் பன்னீர்
தயார்செய்யும் நேரம்:20 நிமிடம் | சமைக்கும் நேரம் : 10 நிமிடம் அளவு : 2 பேர் | எந்தவகை சமையல்: இந்திய உணவு
தேவையான பொருட்கள்:
கடாய் மசாலா பொடி செய்ய :
மல்லி - 1 மேஜைக்கரண்டி
ஜீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
கிராம்பு - 2
பட்டை - 1/2"
பிரியாணி இலை -1-2
வர மிளகாய் - 2
சோம்பு - 1/4 தேக்கரண்டி(தேவைப்பட்டால்)
ஜாதிக்காய் -ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்)
மற்றவை :
பன்னீர் -
பச்சை பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும் )
தக்காளி - 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும் )
பச்சை மிளகாய் - 1
இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
- கடாய் மசாலா போடி செய்யக்கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் தனித் தனியாக நல்ல மணம் வரும்வரை வறுத்துக் கொள்ளவும்.
- வறுத்தவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக
அரைத்துவைக்கவும். 1 கப் தண்ணீரில் பச்சைபட்டாணியை வேக வைத்து நீரைவடித்து
வைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் என்னை ஊற்றி வெங்காயம் சேர்த்து
பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு
விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பின் தக்காளி சேர்த்து
சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி 2 மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி
தக்காளியின் பச்சை வாசனை பொய் தண்ணீர் சுண்டும் வரை வதக்கவும் .
- தக்காளி வதங்கியவுடன் வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து
கிளறி பின் பன்னீர் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து 1 நிமிடம்
கிளறவும். பன்னீர் சேர்ந்தவுடன் அதிகம் சமைக்க தேவையில்லை. உடனே முன்பே
தயார் செய்துவைத்துள்ள கடாய் மசாலா போடி 3/4 - 1மேஜைக்கரண்டி சேர்த்து
கிளறி உடனே அடுப்பை அணைத்துவிடவும்.
சூடான சுவையான கடாய் மட்டர் பன்னீர் தயார் :)
என் குறிப்பு:
1. பன்னீர் சேர்த்த பின்பு அதிகம் சமைத்தால் பன்னீரின் பஞ்சு போன்ற தன்மை போய் கெட்டியாகி விடும்.
2.கடாய் மசாலா பொடி செய்ய ஜாதிக்காய் மற்றும் சோம்பு சேர்க்கவேண்டுமென்ற அவசியம் இல்லை.
3.
கடாய் மசாலா பொடி மீதம் இருந்தால் ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக்
கொள்ளலாம். இதனை எந்த காய்கறியுடன் சேர்த்தாலும் நன்றாக
இருக்கும்.குறிப்பாக காலிபிளார் உருளை பொரியலும் அருமையாக இருக்கும்.
Comments
Post a Comment