தீபாவளி நெருங்கிட்டே இருக்கு என்ன பலகாரம் செய்யலாம்னு எல்லாரும் யோசிச்சுட்டே இருப்பீங்க. என் அம்மா முறுக்கு சுட்டா ஒரு சம்பட முறுக்க ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிச்சிருவோம். அவ்ளோ நல்லா மொறு மொறுனு இருக்கும். என் அம்மா அளவுக்கு வரலைனாலும் இந்த முறுக்கு ரொம்ப சுவையை மொறுமொறுனு வந்துச்சு. தீபாவளி வந்தாலே இனிப்பு கார வகை-னு நிறைய செய்வோம். இப்ப இந்த ஓலை முறுக்க எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 படி
பொட்டு கடலை - 1/2 படி
வர மிளகாய் - 3
பூண்டு – 5 - 10(தேவைப்பட்டால்)
எள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெண்ணை / காய்ந்த எண்ணெய் - 1/4 கப்
எண்ணெய் - 1 லிட்டர்
- அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதனை நன்கு களைந்து வைக்கவும். கிரைண்டரில் முதலில் வர மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து அரைபட்டவுடன் களைந்த அரிசி சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நைசாக அரைந்தவுடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
- ஒரு மிக்ஸியில் பொட்டு கடலையை எடுத்து நைசாக அரைக்கவும். பின் அதனை சலித்து எடுத்துக் கொள்ளவும்.
- அரைத்த அரிசிமாவு கலவையுடன் சலித்த பொட்டுக் கடலை மாவு , உப்பு , எள்ளு மற்றும் வெண்ணை சேர்த்து நன்கு பிசையவும். தேவைப் பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசையவும். மாவு கையில் ஒட்டாதவாறு அதே சமயம் கொஞ்சம் லூசாகவும் பிசையவும்.
- ஒரு கனமான வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். ஓலை முறுக்கு செய்வதற்கு தேவையான அச்சை எடுத்து முறுக்கு பிடியில் போட்டு உள்புறமாக சிறிது எண்ணெய் தேய்த்து வைக்கவும்.
- பின் சிறிதளவு மாவை எடுத்து முறுக்கு பிடியில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிந்து விடவும்.(பிழியும் பொழுது சிரமமாக இருந்தால் சிறிது தண்ணீர் விட்டு மாவை பிசைந்து பின் உபயோகிக்கவும். மாவு கெட்டியாக இருந்தால் பிழிவது சிரமம்.) ஒரு புறம் முறுக்கு வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவிடவும். நுரை அடங்கிவிட்டால் முறுக்கு வெந்து விட்டது என்று அர்த்தம் இப்பொழுது எண்ணெயில் இருந்து முறுக்கை எடுக்கவும்.
- இவ்வாறு எல்லா மாவையும் எண்ணெயில் பிழிந்து வேகவைத்து எடுத்தால் ஓலை முறுக்கு தயார்.
சுவையான மொறுமொறுப்பான ஓலை முறுக்கு தயார் :)
என் குறிப்பு:
1. அரிசி மாவு கொண்டும் இந்த முறுக்கை செய்யலாம். அப்பொழுது மாவிற்கு இணையாக பொட்டு கடலை மாவு சேர்க்கவும்.
2. வெண்ணெய்க்கு பதில் காய்ந்த எண்ணெய் கூட சேர்க்கலாம்.
3. முதல் முறை சிறிது முறுக்கை மட்டும் பிழிந்து சுவைத்துப் பாருங்கள், மொறுமொறுப்பாக இல்லை எனில் மேலும் சிறிது வெண்ணை அல்லது காய்ந்த எண்ணெய் சேர்த்து பிசைந்து சுடவும்.
4. உப்பு போதவில்லை எனில் சிறிதளவு தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்து மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.
5. பூண்டு வேண்டாமெனில் தவிர்த்துவிடலாம்.
Comments
Post a Comment