நேயர்கள் அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள் :)
"வான் நோக்கி நாம் கண்ட நட்சத்திரம்
இன்று மண்ணோக்கி வான் காணும்"
"உள்ளத்திலும் இல்லத்திலும் இருள் விலகி
சந்தோசப் பேரொளி எங்கும் நிறைந்திட
ஏற்றிடுவோம் கார்த்திகை தீபம் இந்நன்னாளிலே"
பாரம்பரிய சமையல்ல எள்ளுக்கு ஒரு தனி இடம் உண்டு. அந்தக் காலத்துல எள்ளு உருண்டை பிடிச்சா கை புண்ணே ஆயிருமாம அவ்ளோ எள்ளு போட்டு உலக்கைல குத்தி உருண்டை செய்வாங்களாமா. ஆனா இப்ப நம்ம அவ்ளோ கஷ்டப் படவேண்டிய அவசியம் இல்ல.
எள்ளு உருண்டை
தயார்செய்யும் நேரம்:1 நாள்| சமைக்கும் நேரம் : 15 நிமிடம் அளவு : 25 உருண்டை | எந்தவகை சமையல்: இந்திய உணவு
தேவையான பொருட்கள்:
கருப்பு எள் - 250 கிராம்/ 1 கப்
பொட்டுக் கடலை - 100 கிராம்/ 1/2 கப்
வறுத்த வேர்க்கடலை - 100 கிராம்/ 1/2 கப்
வெள்ளம்/கரும்பு சக்கரை - 350 - 400 கிராம் / 1 1/2 கப்
செய்முறை விளக்கம்:
- எள்ளை நன்கு களைந்து வெயிலில் ஒரு நாள் முழுவதும் காய வைக்கவும். எள்ளை வடசட்டியில் போட்டு பொரியும் வரை வறுக்கவும்(அதாவது எள் சடபுட சடப்புடனு வெடிக்கும்). முதலில் சப்பையாக தோற்றமளிக்கும் எள் வறுபட்டதும் சற்று உப்பினார் போல் தோன்றும்.
- பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து, அரைத்த மாவை ஒரு தட்டத்தில் வைக்கவும்.
- வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கிக் கொள்ளவும். ௨ நிமிடம் வடசட்டியில் லேசாக வறுத்தால் தோல் நீக்குவதற்கு சுலபமாக இருக்கும். இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து முன்பே அரைத்து வைத்துள்ள கடலை மாவுடன் சேர்க்கவும்.
- வறுத்து வைத்துள்ள எள்ளை முடிந்த அளவு இரண்டு கைகளுக்கு நடுவே நெரித்து தோசை புடைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். இதனுடன் வெள்ளம்/ கரும்பு சக்கரை மற்றும் அரைத்து வைத்துள்ள கடலை மாவு, வேர்க்கடலை மாவு சேர்த்து சிறிது இடைவெளி விட்டு விட்டு அரைக்கவும். ஓரங்களில் உள்ள மாவை தள்ளி விட்டு தள்ளி விட்டு கலவை அனைத்தும் ஒன்று திரண்டு வரும் வரை அரைக்கவும்.
- அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி கட்டி இல்லாமல் கலக்கிக் கொள்ளவும். ஒரு கை அளவு மாவை எடுத்து உருண்டைகளாக பிடிக்கவும். உருண்டை பிடிக்கமுடியவில்லை எனில் மறுபடியும் மாவுக்கு கலவையை மிக்ஸியில் போட்டு சிறிது அரைக்கவும், அணைத்து ஒன்று திரண்டு மிக்ஸி சுற்ற சிரமப் படும். பின் அதனை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால் எள்ளு உருண்டை தயார்.
சுவையான சத்தான எள்ளு உருண்டை :)
என் குறிப்பு:
1. வெள்ளை எள் கூட உபயோகிக்கலாம் ஆனா எள்ளு உருண்டைக்கு பாரம்பரியம் கருப்பு எள் தன் உபயோகிப்பாங்க.
2. எள் வேர்க்கடலை ரெண்டுமே அரைக்கும் போது எண்ணெய் விடும் அதனால் உருண்டை பிடிக்க வேற எதுவும் தேவை படாது.
3. சிலர் பாகு காய்ச்சி பண்ணுவாங்க.
4. உருண்டை பிடிக்கிற பதத்துல மாவு இல்லைனா மறுபடியும் மிக்ஸில போட்டு அரைச்சா எண்ணெய் விட்டு கலவை உருண்டை பிடிக்க ஏதுவா இருக்கும்.
Comments
Post a Comment