இந்த பீட்ரூட் சூப் ரத்த ஓட்டம் சீரா இருக்கிறதுக்கு உதவும். இதை திருப்பூர் அமுச்சி சொல்லி குடுத்தாங்க. அவங்க காய் வேக வைக்கும் போது தண்ணி கொஞ்சம் ஜாஸ்தியா ஊத்திட்டாங்கன்னா அதை வீணாக்காம இப்படி சூப் செஞ்சிருவாங்க. இது ரொம்ப சுலபமான ஒரு சூப். இது ஒரு அடிப்படை சூப் னு கூட சொல்லலாம் அதாவது நிறைய அது இதுனு சேர்க்காம சிம்பிளா செஞ்சிருக்கேன். இதுல வேணும்னா நூடுல்ஸ் ப்ரை பண்ணி செதுக்கலாம், கார்ன் பிளேக்ஸ் வறுத்து சேர்த்துக்கலாம். இதை எப்படி செய்றதுன்னு இப்ப பாக்கலாம்.
பீட்ரூட் சூப்
தயார்செய்யும் நேரம்:10 நிமிடம் | சமைக்கும் நேரம் : 15 நிமிடம் அளவு :500ml | எந்தவகை சமையல்: இந்திய உணவு
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1 சிறியது / 1/2 கப் சிறு துண்டுகளாய் நறுக்கியது
பெரிய வெங்காயம்- 2 - 3 மேஜைக்கரண்டி(பொடியாய் நறுக்கியது)
சோள மாவு - 1 - 2 மேஜைக்கரண்டி
கருவேப்பில்லை - 1 கொத்து
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
- பீட்ரூட்டை கழுவி தோல் சீவி அரிந்து கொள்ளவும். வெங்காயத்தை பொடி பொடியாக அரிந்து வைக்கவும். ஒரு குட்டிக் கிண்ணத்தில் சோளமாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
- சிறிதாக அரிந்துவைத்துள்ள பீட்ரூட்டை 1.5 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைக்கவும். காய் முக்கால் பக்கம் வெந்ததும் மீதமுள்ள தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வெந்த பீட்ரூட்டை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
- வடசட்டியில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து பொரிந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் பொடியாய் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் லேசாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பீட்ரூட் விழுதை சேர்த்து கிளறி அதனுடன் அரை கப் தண்ணீர், உப்பு மற்றும் வடித்து வைத்துள்ள பீட்ரூட் தண்ணீரையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
- கொதி வரும் பொழுது சோளமாவுக்கு கரைசலை ஊற்றி கடைசியாக மிளகுத் தூளையும் சேர்த்து ஒரு கிளறு கிளறி கொத்தமல்லி தலை தூவி இறக்கினால் பீட்ரூட் சூப் தயார்.
சுவையான சத்தான பீட்ரூட் சூப் தயார்:) சுவைத்து மகிழுங்கள்:)
என் குறிப்பு:
1. நான் தண்ணீர் பதத்தில் வைத்துள்ளேன், வேண்டுமெனில் தண்ணீர் சிறிது குறைவாக சேர்த்து குழம்பு பதத்தில் செய்யலாம்.
10 Surprising Beetroot Juice Benefits in Tamil
ReplyDelete