வழக்கமா மதியத்துக்கு பருப்பு, ரசம், ஏதாச்சும் பொரியல் செய்றது வழக்கம். இவ்ளோ செய்ய நேரம் இல்லைனு தோணும் போது நான் இந்த புடலங்காய் கூட்டு செய்றது வழக்கம். பருப்பு பொரியல் எல்லாமே சேர்ந்து வந்திடுறதுனால உடல் ஆரோகியாமும் சீர்குலையாது. அங்க அங்க கடலை பருப்பு வாயில சிக்கும் போது சாப்பிட அருமையா இருக்கும். இந்தக் கூட்டு எனக்கு ரொம்பவும் பிடித்தமான ஒரு உணவு . இதை செய்றது எப்படினு இப்ப பாக்கலாம்.
புடலங்காய் கூட்டு
தயார்செய்யும் நேரம்:15 நாள்| சமைக்கும் நேரம் : 15 நிமிடம் அளவு : 3 பேர் சாப்பிடலாம் | எந்தவகை சமையல்: இந்திய உணவு
தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 2
பாசி பருப்பு - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கருவேப்பில்லை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 - 4 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் -2
வர மிளகாய் - 1
ஜீரகம் - 1/2 தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
- புடலங்காயை ஒரு ஸ்பூன் கொண்டு மேல் தோலை சொரண்டிவிடவும். பின் அதனை இரண்டாக வெட்டி உள்ளே உள்ள விதைகளை சுத்தமாக நீக்கி விடவும். சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- பாசி பருப்பை களைந்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி 2 அல்லது 3 விசில் விட்டு எடுத்து நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.
- துருவிய தேங்காய், சீரகம் மற்றும் பச்சை மிளகாயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரியவிடவும். கடுகு பொரிந்ததும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் வர மிளகாய் கருவேப்பில்லை சேர்த்து அதனுடன் நறுக்கிய புடலங்காய் துண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- புடலங்காய் முக்கால் பாகம் வதங்கியவுடன் மசித்து வைத்துள்ள பாசி பருப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறவும். தேவைப் பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு 5 - 8 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்.
சூடான சுவையான புடலங்காய் சாதத்துடன் பரிமார தயார்!
என் குறிப்பு:
1. இறுதியில் புடலங்காயை கையில் நசுக்கிப் பார்த்தல் சுலபமாக நசிந்துவிட்டால் நன்கு வெந்துவிட்டது என அர்த்தம்.
2. புடலங்காய் வேகவில்லை எனில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
3. புடலங்காய் நாச நாச வெந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி வெந்தால் சுவை நன்றாக இருக்காது.
4. பாசிப்பருப்பை நன்கு குலைய விடவேண்டும்.
Website create, call 7708012142
ReplyDelete