காலைல எந்திரிச்சு இட்லி அல்லது தோசை செய்றப்ப நம்மல்ல பெரும்பாலோர்க்கு தொட்டுக்க என்ன சட்னி செய்றதுன்னு யோசிச்சு யோசிச்சே பாதி நேரம் கழிஞ்சிரும். இந்த புளி சட்னி தோசைக்கும் இட்லிக்கும் ரொம்ப நல்ல இருக்கும். சாப்பாடோடவும் ரொம்ப நல்ல இருக்கும்.இந்த சட்னிய என் சித்தி கிட்ட நான் கத்துக்கிட்டேன். புளிப்பு, காரம், கொஞ்சம் இனிப்பு உப்பு எல்லாம் சேர்ந்து நல்லா இருக்கும். இதை எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.
தேவையான பொருட்கள்:
புளி - சிறிய எலுமிச்சம்பழம் அளவு
கடலை பருப்பு - 1/4 கப்
கருப்பு உளுந்து பருப்பு - 1/4 கப்
மல்லி - 1 மேஜைக்கரண்டி
வர மிளகாய் - 3
கருவேப்பில்லை - 1 கொத்து
துருவிய தேங்காய் - 2 - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடலை எண்ணெய் / ஆயில் - 2-3 மேஜைக்கரண்டி
வெள்ளம் - 1/2 மேஜைக்கரண்டி
செய்முறை விளக்கம்:
- வாணலியில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பை போட்டு வதக்கவும், லேசாக நிறம் மாறும் பொழுது உளுந்து பருப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். இதனுடன் வரமிளகாய் சேர்க்கவும்.
- உளுந்து லேசாக நிறம் மாறும் பொழுது கருவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
- 1 நிமிடம் கழித்து துருவிய தேங்காய் சேர்க்கவும். இப்பொழுது தேவைப்பட்டால் இன்னும் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வதக்கவும். இந்த சட்னிக்கு தேங்காய் எண்ணெயில் நன்றாக வதக்கினால் தான் சுவை கூடும். தேங்காய் துருவல் எண்ணெயில் நிறம் மாறும் வரை வதக்கி அடுப்பை அணைக்கவும்.
- அதனுடன் புளி, வெள்ளம், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைக்கவும். புளி சட்னி தயார்:)
என் குறிப்பு:
1. அனைத்தும் எண்ணெயில் வதங்குவதில் தான் இந்த சட்னியின் சுவை அடங்கி உள்ளது, எனவே எண்ணெய் சிறிது தாராளமாக சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும்.
2. கடைசியில் கடலைப் பருப்பு மற்றும் உளுந்து பருப்பின் நிறம் நன்றாக சிவந்துவிட வேண்டும் ஆனால் கருகிவிடக் கூடாது. எனவே தான் மிதமான தீயில் இதனை சமைக்க வேண்டும்.
3. கருப்பு உளுந்து பருப்பிற்கு பதில் வெள்ளை உளுந்து பருப்பு கூட சேர்க்கலாம். நிறம் மற்றும் சுவையில் சிறிது மாற்றம் இருக்கும்.
4. வேண்டுமென்றால் சிறிது கடுகு , உளுந்து மற்றும் கருவேப்பில்லை சேர்த்து தாளித்து பரிமாறலாம்.
Comments
Post a Comment