தயிர் சாப்பாட்டுக்கு ஊறுகாய் இல்லாம நிறைய பேர்க்கு சாப்பிடவே முடியாது. நானும் அப்படி தான். அதுலயும் எலுமிச்சை ஊறுகாய் அடடா சொல்லும்போதே மதியம் தயிர் சாத்துக்கூட சாப்பிடணும் போல இருக்கு. தாலிச்ச சாப்பாட்டுக்கு ரொம்ப நல்ல இருக்கும். அடிக்கடி ஊறுகாய் செய்றதுனால எப்பவுமே என்கிட்டே வெந்தய பொடி இருக்கும், அப்படி உங்ககிட்ட இல்லைனா வெந்தயத்தை லேசா வறுத்து அரைச்சு சேர்த்துக்கலாம். இந்த ஊறுகாய் எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.
எலுமிச்சை ஊறுகாய்
தயார்செய்யும் நேரம்:5 நாள் | சமைக்கும் நேரம் : 15 நிமிடம் அளவு :400-500gm | எந்தவகை சமையல்: இந்திய உணவு
தேவையான பொருட்கள்:
எலுமிச்சம்பழம் - 8
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி/ வெந்தய தூள் - 1 1/2 தேக்கரண்டி
கல் உப்பு - 1/4 கப்
நல்லெண்ணெய் - 1/3 கப்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- எலுமிச்சம்பழங்களை கழுவி காட்டன் துணி அல்லது கிட்சன் டவல் கொண்டு ஈரத்தை நன்றாக துடைக்கவும்.
- துடைத்த பழங்கள் ஒவொன்றையும் 8 துண்டுகள் போடவும். துண்டுகள் போடும்போதே விதைகளை நீக்கி விடவும்.
- வெட்டி வைத்த துண்டுகளில் இரண்டு பழத்துண்டுகளின்(16 துண்டுகள்) சாற்றை மட்டும் பிழிந்து கொள்ளவும். கண்ணாடி பாட்டிலை நன்றாக கழுவி வெயிலில் காயவைத்து தண்ணீர் இல்லாமல் சுத்தமாகவைக்கவும். கண்ணாடி பாட்டிலில் பிழிந்த துண்டுகளையும், அவற்றின் சாறையும் சேர்த்து விடவும். மீதம் உள்ள எலுமிச்சம்பழ துண்டுகளையும் சேர்க்கவும்.
- கல் உப்பை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- இதனுடன் உப்பு மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக குலுக்கி மூடி போட்டு மூடிவைக்கவும். 4 - 5 நாட்களுக்கு காலை மற்றும் மாலையில் நன்றாக பாட்டிலில் உள்ள கலவையை குலுக்கி விடவும்.
- 5 நாட்கள் கழித்துப் பார்த்தால் எலுமிச்சம்பழத்தில் உப்பு நன்றாக கலந்து தோல் மிருதுவாக இருக்கும். ஒரு வடசட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகுசேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் பெருங்காயத் தூள் சேர்த்து பின் எலுமிச்சம் துண்டுகளை சேர்த்து அவற்றில் உள்ள தண்ணீர் சிறிது வற்றும் வரை வதக்கவும். தண்ணீர் முழுவதும் வற்ற விடவேண்டாம்.
- இதனுடன் மிளகாய்த் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை 2 நிமிடம் வதக்கவும். பின் கடைசியாக வெந்தயத் தூள் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும். (வெந்தயத் தூள் இல்லையெனில் வெந்தயத்தை லேசாக வறுத்து மிக்ஸியில் பொடித்து சேர்த்துக் கொள்ளவும். ரொம்ப வறுத்தால் ஊறுகாய் கசக்கும்.)
இவற்றை சூடு ஆறியதும் சுத்தமான கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து சரியாக உபயோகித்தால் ரொம்ப நாள் கெட்டப் போகாமல் நன்றாக இருக்கும். இடை செய்து ஒரு 5 நாட்களுக்கு பின்பு உபயோகித்தால் சுவை கூடியிருக்கும்.
என் குறிப்பு:
1. எலுமிச்சம்பழம் உப்பில் நன்கு ஊறினால் நன்றாக இருக்கும்.
2. கல் உப்பு சேர்த்தால் தான் சுவை நன்றாக இருக்கும். எனவே, கல்லுப்பு உபயோகியுங்கள்.
3. 5 நாட்களுக்கு உப்பு மற்றும் எலுமிச்சம்பழக் கலவையை தினமும் இருமுறை குலுக்கி விடுவது அவசியம்.
4. முடிந்தவரை விதைகளை அகற்றி விடுங்கள் இல்லையேல் ஊறுகாய் கசக்கும்.
Comments
Post a Comment