இந்த பொரியல் மதியம் சாப்பாட்டோட சாப்பிட ரொம்ப நல்ல இருக்கும். சுவையான மட்டும் ஒரு சத்தான உணவும் கூட. இதை நான் முதல்ல என் தோழி பவி ஓட அம்மா கிட்ட எப்படி செய்யணும்னு கேட்டு கத்துக்கிட்டேன். வழக்கமா முருங்கைக்காயை சாம்பார்-ல தான் போடுவோம். கொஞ்சம் வித்யாசமா இதை செஞ்சு பாருங்க.
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 3 (பெரியது 2" அகலத்துக்கு வெட்டிக் கொள்ளவும்)
தக்காளி - 1
கருவேப்பில்லை - 1 கொத்து
சின்ன வெங்காயம் - 8
பச்சை மிளகாய் - 1
தேங்காய் துருவல் - 1/3 கப் (நெருக்கமாக அடைத்தது)
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1.5 மேஜைக்கரண்டி
செய்முறை விளக்கம்:
- தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக வைக்கவும். துருவிய தேங்காய் மட்டும் சோம்பை ஒரு மிக்ஸில் ஜாரில் எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி கடுகு பின் சீரகம் சேர்க்கவும். அவை பொரிந்ததும் பச்சைமிளகாய் கருவேப்பில்லை சேர்க்கவும்(பச்சை மிளகாய் வெடித்து தெறிக்கும் எனவே கவனம் தேவை). பின் இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்துக் 2 நிமிடம் வதக்கவும். பின் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , மல்லித் தூள் சேர்த்து கிளறி பின் 2" அகலத்திற்கு வெட்டியா முருங்கைக்காயை சேர்த்து வதக்கவும்.
- ஒரு நிமிடம் கழித்து அரைத்துவைத்துள்ள மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு,1/2-1 கப் அளவு தண்ணீர் சேர்த்து கலந்து ஒரு மூடி போட்டு மூடி 5-8 நிமிடம் வரை மிதமான சூட்டில் வேகா விடவும்.
- 8 நிமிடம் கழித்து மூடியை திறந்து பார்த்தால் எண்ணெய் தனியாக மிதப்பது தெரியும். நமது மசாலா பொரியல் தயார் என்பதனை இது குறிக்கும். முருங்கைக்காய் வெந்துவிட்டதா என்று பார்க்க ஒரு துண்டை எடுத்து நசுக்கிப் பார்க்கும் போது சுலபமாக நசுங்கி மெது மெதுப்பாக இருந்தால் முருங்கைக்காய் வந்துவிட்டது என்று அர்த்தம். இப்பொழுது அடுப்பை அணைக்கவும்.
சுவையான சத்தான முருங்கைக்காய் மசாலா பொரியல் தயார்:)
சூடான சாதத்துடன் பரிமாறினாள் இன்னும் சுவையாக இருக்கும்.
என் குறிப்பு :
1. முத்தலும் பிஞ்சுமில்லாமல் அளவான காயை தேர்ந்தெடுக்கவும்.
2. மசாலா நிறைய வேண்டுமென்றால் தேங்காயை கொஞ்சம் அதிகமாக சேர்த்து அரைத்து கொண்டு,கொஞ்சம் காரம் சேர்த்துக் கொள்ளலாம்.
Comments
Post a Comment