இந்த ஐஸ்கிரீம் வீட்டுல செய்றது ரொம்ப சுலபம். நாலு பொருட்கள் இருந்தாப் போதும். வீட்டுல செஞ்ச
ஹெவி கிரீம் வெச்சு பண்ணினேன் ரொம்ப நல்லா வந்துச்சு. நீங்களும் செஞ்சு பார்த்துட்டு எப்படி வந்துச்சுனு சொல்லுங்க.
தேவையான பொருட்கள்:மாதுளம் பழம் சாறு - 1 கப்
எலுமிச்சம் பழம் - 1 (1 மேஜைக்கரண்டி சாறு)
சர்க்கரை - 1 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
1. முதலில் தோல் உரித்து சுத்தம் செய்து வைத்த மாதுளம்பழத்தை ஒரு மிக்ஸியில் போட்டு இரண்டு மூன்று திருப்பு திருப்பவும். ரிவெர்ஸில் திருப்புவது நல்லது. ஏனென்றால் விதைகள் அரைப்படக் கூடாது.(மிக்ஸியில் போடாமல் பழத்தை நன்கு கைகளால் பிழிந்தும் சாறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்) அதனை வடிகட்டியில் ஊற்றி வடிகட்டவும்.வடிகட்டும் போது சாறினை நன்றாக பிழிந்து வடிகட்டவும்.
2. மிக்ஸியில் போட்டு பொடித்த சக்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். சக்கரையை அப்படியே கூட போடலாம் அது கரைவதற்கு நேரம் எடுக்கும் என்று அரைத்து சேர்த்துள்ளேன். அதனுடன் மாதுளை சாற்றை ஊற்றி நன்கு கலக்கவும்.
3. எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
4. வீட்டில் செய்த கிரீமை உபயோகித்தேன். கிரீம் குளிர்ந்திருக்கும் போதே நன்கு கலக்கி, கலவையுடன் சேர்த்து விடவேண்டும். ரொம்ப கலக்கினால் வெண்ணை ஆகிவிடும். அதனால் கவனமாக இருக்கவும்.
5. பின் கலவையை விஷ்க்(whisk) கொண்டோ அல்லது ஹேண்ட் மிக்செர்(hand mixer) கொண்டோ கலக்கவும். மிக்ஸியில் போட்டும் கலக்கலாம். உங்கள் கை வலிமையானது என்றால் விஷ்க்-ல் 15 நிமிடம் வரை கலக்க வேண்டும்.
நான் ஹேண்ட் மிக்ஸர் கொண்டு கலவை பஞ்சு போல் ஆகும் வரை அடித்தேன்.
6. இதனை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு ப்ரீசரில் 3 மணி நேராக வைக்கவும். மூன்றுமணி நேரம் கழித்து ஐஸ் கிரீம் செட் ஆனதும். மறுபடியும் ஹேண்ட் மிக்ஸர் கொண்டோ அல்லது மிக்ஸியில் போட்டு நன்கு கலந்து மறுபடியும் டப்பாவில் போட்டு ப்ரீசரில் வைத்து கெட்டியாவதற்கு விடவும்.
இதே போன்று ஐஸ் கிரீம் கெட்டியானதும் 2 மணி நேரத்திற்கு ஒரு தடவை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு கலக்கி மீண்டும் ப்ரீசரில் வைக்கவும். இவ்வாறு செய்வதனால் ஐஸ்கிரீமில் ஐஸ்கட்டி சேர்வது தவிர்க்கப் படும். சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக சாஃப்டாக இருக்கும்.
ஜில் ஜில் மாதுளை ஐஸ்கிரீம் தயார்:)
என் குறிப்பு:
1. நான் வீட்டில் செய்த ஹெவி கிரீம் உபயோகித்தேன், நீங்கள் கடையில் வாங்கியும் உபயோகிக்கலாம்.
2. மாதுளம்பழத்தை கொட்டையுடன் அரைத்தால் கசப்பு சுவை சேர்ந்து விடும் பின் ஐஸ் கிரீம் நன்றாக இருக்காது எனவே அரைக்கும் போது சற்று கவனமாக கொட்டை அரைபடாதவாறு அரைக்கவும்.
Comments
Post a Comment